கோவையில் பட்டாசு வெடித்ததில்குழந்தைகள் உட்பட 8 பேர் காயம்.

கோவை அக்டோபர் 22 தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை யொட்டி பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அத்துடன் குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெற்றோர்கள் அருகில் இருந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது .கோவையில் குழந்தைகள் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினர். இதில் ராக்கெட் வெடி, அணுகுண்டு உட்பட அதிக சத்தத்துடன் வெடிக்கும் வெடிகளை பலர் வெடித்து மகிழ்ந்தனர். கோவையில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பெரும்பாலான இடங்களில் ஈரபதமாகவே காணப்பட்டது. அத்துடன் தீபாவளி நாளான நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் 8 மணி வரை அடை மழை பெய்தது. இதன் காரணமாக தீவிபத்துக்கள் ஏற்படவில்லை. இருப்பினும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்த போது 8பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள் கோவை அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்றனர். அதில் 10 வயது சிறுமி ஒருவருக்கு 10 சதவீதம் அளவுக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவருக்கு குழந்தைகள் தீவிர சிகிச்சைபிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 3 பேருக்கும் கண்களில் லேசான பாதிப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு கண்களில் தண்ணீரை பீய்ச்சி அடித்து கழுவும் சிகிச்சை அளிக்கப்பட்டது.