அனைவருக்கும் இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும் என்பது தான் அம்மா, அப்பாவின் ஆசையாக இருந்தது.அதுக்காக தான் இலவச மருத்துவ முகாம் நடத்துவதாக மருத்துவர் பிரபாகரன் தெரிவித்தார்..
திருப்பத்தூர் மாவட்டம், ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தருண் ஹார்ட் சென்டர் மற்றும் டாக்டர் ஹரிதாஸ் மைண்ட் கேர் மருத்துவமனைகள் நடத்தும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. அதில் இருதய நோய், புற்றுநோய், சிறுநீரகம், கல்லீரல், இரைப்பை, மனநலம், நரம்பியல், பெண்கள் மற்றும் பொது மருத்துவம் பார்க்கப்பட்டது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, காக்கங்கரை, குனிச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் பயன்பெற்றனர்.

அனைவருக்கும் தீவிர பரிசோதனை செய்யப்பட்டு, பாதிப்படைந்த நபர்களுக்கு பாதி கட்டணத்தில் சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் சிறிய மற்றும் லேசான பாதிப்பு இருப்பவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி, மருந்து மாத்திரைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டது. இது குறித்து இருதய நோய் சிறப்பு மருத்துவர் பிரபாகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, எனது தாய், தந்தையின் விருப்பத்திற்கு இணங்க, இலவச மருத்துவ முகாம் தர்மபுரி மருத்துவர்கள் துணையுடன் நடத்தி வருகிறோம். எங்கள் நோக்கம் அனைவருக்கும் இலவச மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதுதான். அதிக பாதிப்பு இருப்பவர்களுக்கு மிக மிக குறைந்த கட்டணத்தில் நாங்கள் சிகிச்சை அளிக்க தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.









