ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை…

ன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாற்றப்பட்டுள்ள பாடத் திட்டங்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருத்தி அமைக்கப்பட்ட, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள நிலையில், பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்விக்கான தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025இன் அடிப்படையில் புதிய கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டங்களை உருவாக்க பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமையில் உயர்மட்ட வல்லுநர் குழு மற்றும் கலைத்திட்ட வடிவமைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

இக்குழுவினரின் வழிகாட்டுதலின்படி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் ஒன்று முதல் ஐந்து வகுப்புகளின் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சூழ்நிலையியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இப்பாடத்திட்டங்களைக் கல்வியாளர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் tnschools.gov.in என்ற இணையத்தளத்தில் இன்று முதல் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பாடத்திட்டம் சார்ந்து கருத்துக்களை கூற விரும்புவோர், இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணையவழிப் படிவம் வாயிலாக, சுய விவரங்களுடன் 25 ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் தெரிவித்துள்ளார்.