கோவை பீளமேடு பி.எஸ்.ஜி. தொழில் நுட்பக் கல்லூரி எதிர் புறம் நேற்று முன்தினம் இரவில் ஒருவர் தாறுமாறாக கார் ஓட்டி வந்தார். அவரை அங்கிருந்த பொது மக்கள் கண்டித்தனர் . இந்த நிலையில் அவர் காரை நடுரோட்டில் நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்டார். இதனால் பொதுமக்கள் சிலர் ஆத்திரத்தில் அவரது கார் கண்ணாடியை உடைத்து அவரையும் தாக்கினார்கள். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் காரின் மேல் ஏறி நின்று கொண்டார். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பீளமேடு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அவரிடம் பேசி கீழே அழைத்தனர். போலீசாரிடமும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.. போலீசாரை பணி செய்ய விடாது தடுத்தார். இந்த நிலையில் போலீசார் அவரை மடக்கி பிடித்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரகளையில் ஈடுபட்ட அந்த ஆசாமியை கைது செய்தனர். விசாரணையில் அவர் கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த ஜோனி மகன் அந்தோணி ( வயது 35) என்றும், தற்போது இவர் சேலம் ரத்னசாமிபுரத்தில் வசித்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது. இவர் மீது ஏற்கனவே கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் தனது மனைவியை கொடுமைப்படுத்தியதாக வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கார் பறிமுதல் செய்யப்பட்டது.

What’s your reaction?
Love1
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








