அரசு ஊழியர்களே உஷார்.!!

சென்னை: அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டால் கைது தான் செய்ய முடியும். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கு நடத்தவேண்டும் என்றால் அதற்கு அரசிடம் அனுமதி பெற வேண்டும்.
ஆனால் எல்லா கைதும் வழக்காக மாறுவது இல்லை.. வழக்கை நடத்த அனுமதி தரும் விவகாரத்தில் பல மாதங்களாக கிடப்பில் போடப்படுவதாக புகார்கள் உள்ளது. இனி அப்படி செய்ய முடியாது. 120 நாளில் அரசு ஒன்று அனுமதி தர வேண்டும் அல்லது மறுக்க வேண்டும். இல்லாவிட்டால் தானாகவே அனுமதி கிடைத்ததாக மாறிவிடும். ஏனெனில் மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது.

பொதுவாக, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு அரசு ஊழியர் மீது எப்ஐஆர் போட, பிரிவு 17A-ன் படி அரசின் முன் அனுமதி தேவையாகும். ஆனால், லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாகப் பிடிக்கப்படும் வழக்குகளுக்கு இந்த முன் அனுமதித் தேவை இல்லை. போலீசார் உடனடியாகக் கைது செய்து விசாரணையைத் தொடங்க முடியும்.

கைது செய்த பிறகு, அந்த அதிகாரி மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை (Charge Sheet) தாக்கல் செய்ய பிரிவு 19-ன் படி அரசின் அனுமதி தேவை. இதில் அரசு தாமதம் செய்வதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. என்ன தான் தினமும் பேப்பரில் அரசு ஊழியர் லஞ்சம் வாங்கியதாக கைது என்று செய்திகள் வந்தாலும், அவர்கள் சஸ்பெண்ட் முடிந்து மீண்டும் பணியில் தொடர மற்றும்தண்டனை கிடைக்க காலதாமதம் ஏற்பட அரசு அனுமதி தருவதில் ஏற்படும் தாமதம் காரணமாக இருக்கிறது. பல்வேறு வழக்குகளில் அனுமதி உடனே கிடைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளது

ஆனால் மத்திய அரசின் புதிய சட்டத் திருத்தங்களின்படி, அரசு அனுமதி கோரும் விண்ணப்பத்தின் மீது 4 மாதங்களுக்குள் (120 நாட்கள்) முடிவெடுக்க வேண்டும். புதிய பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டத்தின்படி, அரசு 120 நாட்களுக்குள் (4 மாதங்கள்) அனுமதி வழங்கவோ அல்லது மறுக்கவோ இல்லை என்றால், அந்த அனுமதி வழங்கப்பட்டதாகவே கருதப்படும் . இதன் பிறகு நீதிமன்றம் தானாகவே வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்.

தெளிவாக சொல்வது என்றால், அரசு 120 நாட்களுக்குள் எந்த பதிலும் அளிக்கவில்லை என்றால், அந்த அதிகாரிக்கு எதிரான வழக்குத் தொடர அரசு அனுமதி அளித்துவிட்டதாகவே சட்டம் கருதும். லஞ்ச ஒழிப்பு போலீசார் இனி நீதிமன்றத்தில் நேரடியாகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யலாம்.

அதேபோல் அரசு போதிய ஆதாரங்கள் இருந்தும் அனுமதி அளிக்க மறுத்தால் , அதை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிடலாம்.அரசின் மறுப்பு ஆணை தர்க்கத்திற்குப் புறம்பாகவோ அல்லது உண்மைகளை மறைப்பதாகவோ இருந்தால், உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் அந்த ஆணையை ரத்து செய்துவிடும்.

சுப்ரமணிய சுவாமி Vs மன்மோகன் சிங் வழக்கில், அரசு அனுமதி வழங்க காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்றும், தாமதம் செய்வது நீதியை மறுப்பதற்குச் சமம் என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருந்தது. அதேபோல் வினீத் நாராயண் வழக்கில், ஊழல் வழக்குகளில் அனுமதி பெறுவதற்கான கால அவகாசம் வலியுறுத்தப்பட்டிருந்தது.

லஞ்சம் வாங்கும் போது பிடிபட்ட அதிகாரிகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை ரசாயண பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகள், ரசாயனச் சோதனை போன்ற அறிவியல் பூர்வமான ஆதாரங்களைச் சேகரித்திருக்கும். இத்தகைய வலுவான ஆதாரங்கள் இருக்கும்போது அரசு அனுமதி மறுப்பது கடினம் ஆகும்; மீறி மறுத்தால் அது நீதிமன்றத்தில் செல்லாது.. எனவே லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் வாழ்நாள் முழுக்க சிக்கலை சந்திப்பார்கள் என்பது மட்டும் உறுதி