சென்னை: தமிழ்நாட்டில் அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாத தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் ஒவ்வொரு அரசியல் கட்சிளும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வெளியிட போகின்றன.
தேர்தல் கட்சிகளை பொறுத்தவரை என்னென்ன வாக்குறுதிகள் வாக்காளர்களை சாதகமாக இருக்கும். நமக்கு உடனே வாக்களிக்க விரும்புவார்கள் என்பதை கவனமாக பார்க்கின்றன. இப்போது எல்லாம் நிபுணர் குழுவை வைத்து தொகுதிவாரியாக ஆய்வு செய்து பிரச்சனைகளை பட்டியிலிட்டு அதற்கு தகுந்தாற் போல் தான் வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன. அண்மை காலத்தில் இலவச வாக்குறுதிகள் பல ஏற்கனவே ஆண்ட அதிமுக மற்றும் தற்போது ஆண்டு வரும் திமுகவால் வெளியிடப்பட்டிருக்கின்றன. அண்மையில் கட்சி ஆரம்பித்த தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், குடும்பத்திற்கு ஒரு வீடு-மோட்டார் சைக்கிள் என்பது உள்பட 12 வாக்குறுதிகளை வெளியிட்டிருக்கிறார். அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மலைவாழ்-மீனவ மக்களுக்கு வீடுகள் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்.
திமுகவை பொறுத்தவரை கடந்த சட்டசபை தேர்தலின் போது, அனைத்து குடும்ப பெண்களுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும் என்று வாக்குறுதி தந்தது. ஆனால் கடந்த 2023-ம் ஆண்டு பட்ஜெட்டில் தகுதியான பெண்களுக்கு மட்டும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து. இதன்படி ஒரு கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை அளித்தது. இந்த பட்டியலில் விடுபட்ட நிறைய பெண்களுக்கு, தங்களுக்கும் கிடைக்கவில்லையே என்ற ஏமாற்றத்தை அளித்தது.
தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், தமிழக அரசு விடுபட்ட பெண்களுக்கும் இந்த உரிமைத்தொகை கிடைக்கும் வகையில் விதிகளை தளர்த்தியது. அதன்படி 2-ம் கட்டமாக கடந்த 12-ந்தேதி முதல் மேலும் 16 லட்சத்து 94 ஆயிரத்து 339 பேருக்கு இந்த உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக ஒரு கோடியே 30 லட்சத்து 69 ஆயிரத்து 831 பேர் மாதம் ஆயிரம் ரூபாய் பெறுகின்றனர்.
இந்த சூழலில் “வெல்லும் தமிழ்ப்பெண்கள்” விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, ரூ.1,000 வழங்குவது தொடக்கம் மட்டும்தான். இந்த தொகை நிச்சயம் உயரும் என்று கூறியுள்ளார். கடந்த தேர்தலில் அ.தி.மு.க பெண்களுக்கு ரூ.1,500 உரிமைத்தொகை அறிவித்து இருந்தது. எனவே இந்த முறையும் எல்லா கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் இந்த உரிமைத்தொகை ரூபாய் ஆயிரத்துக்கு மேலான ஒரு தொகையை கொடுக்க வாய்ப்பு உள்ளது. எனவே யார் ஆட்சிக்கு வந்தாலும் 1500 முதல் 2000 வரை மகளிர் உரிமை தொகை நிச்சயம் கிடைக்கும். அதேநேரம் அதனை ஈடுகட்ட சொத்து வரியை உயர்த்துவது, மதுபானங்களின் விலையை உயர்த்துவது, பத்திரப்பதிவில் உயர்த்துவது, உள்பட அரசு பல்வேறு வழிகளை கையாளவும் வாய்ப்பு உள்ளது. தேர்தல் முடிந்து யார் ஆட்சிக்கு வந்தாலும், போக்குவரத்து, மின்சாரம், சொத்து வரி மற்றும் மதுபானங்களின் விலை ஆகியவற்றில் கைவைக்க அதிக வாய்ப்பும் உள்ளது.








