இந்தியா- நியூசிலாந்த் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்.!!

டெல்லி: வரி விவகாரத்தில் அமெரிக்கா நமக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவை மட்டும் நம்பினால் வேலைக்கு ஆகாது என்று முடிவெடுத்த இந்தியா, பல்வேறு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது நியூசிலாந்துடன் இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை போட்டிருக்கிறது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கிடையே, நீண்டகாலமாக இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை ஆழமாக்குவதுடன், வர்த்தகம், முதலீடு மற்றும் ஒத்துழைப்பை கணிசமாக மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தில் சிறப்பம்சமே.. ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட காலம்தான். அதாவது கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போது இந்த ஒப்பந்தம் குறித்து பேச்சுக்கள் எழுந்தன. இதனையடுத்து வெறும் 9 மாதங்களில் இந்த ஒப்பந்தம் தற்போது இறுதி செய்யப்பட்டிருக்கிறது. இன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நியூசிலாந்து பிரதமர் தொலைபேசியில் உரையாடினர். இதனையடுத்து ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒப்பந்தத்தின்படி நியூசிலாந்து அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 1.79 லட்சம் கோடியை முதலீடு செய்ய இருக்கிறது. இதன் காரணமாக அடுத்த ஆண்டு முதல் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் இரண்டு மடங்காக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல இனி வரும் நாட்களில் நியூசிலாந்து நாட்டின் பொருட்கள் இந்தியாவில் பரவலாக கிடைக்கும்.

நியூசிலாந்திலிருந்து கிவி, ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள், தரைவிரிப்புகள், பால் பொருட்கள், செம்மறி ஆட்டு இறைச்சி, ஒயின் போன்ற மதுபானங்கள் அதிக அளவில் இந்தியாவுக்கு ஏற்றுமதியாகி வருகிறது. குறிப்பாக நியூசிலாந்தின் கிளவுடி பே ‘சாவிக்னான் பிளாங்க்’ ரக ஒயின் மிகவும் பிரபலமானதாகும். இது தற்போது இந்தியாவில் ரூ.7,000 வரை விற்பனையாகிறது. ஆனால் வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்த விலை, ரூ.3,200 வரை குறைய வாய்ப்பு உள்ளது. அதேபோல இந்திய பொருட்களும் நியூசிலாந்தில் நாடுகளில் பரவலாக கிடைக்கும்.

இந்த வர்த்தகம் எம்எஸ்எம்இ எனப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். அதேபோல இரு நாடுகளுக்கு இடையில் கல்வி, வேலைவாய்ப்பில் ஒத்துழைப்பு மேம்படும். மேலும் தொழில்நுட்ப மாற்றம், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

பொருளாதாரம் மட்டுமின்றி, பாதுகாப்பு, விளையாட்டு, கல்வி மற்றும் மக்களுக்கு இடையேயான உறவு ஆகியவற்றில் ஒத்துழைப்பையும் மேம்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டிருக்கின்றன.

இந்த ஒப்பந்தம் வேறு வகையிலும் இந்தியாவுக்கு உதவுகிறது. அதாவது, Five Eyes என்கிற அமைப்பு இருக்கிறது. இது அமெரிக்கா, பிரிட்டன், நியூசிலாந்து என 5 நாடுகள் இணைந்த அமைப்பாகும். இந்த அமைப்பில் உள்ள நாடுகள் தங்களுக்குள் உளவு மற்றும் பாதுகாப்பு கூட்டணியை அமைத்திருக்கின்றன. இந்த கூட்டணியில் உள்ள நாட்டுடன் இந்தியா வர்த்த ஒப்பந்தத்தை எட்டியிருப்பது என்பது, மற்ற நாடுகளுடன் நாம் வர்த்த ஒப்பந்த பேரத்தை பேச உதவும்.

அமெரிக்கா தனது சொந்த வர்த்தக விதியை மற்ற நாடுகள் மீது திணிக்கிறது என்று சர்வதேச அளவில் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இப்படி இருக்கையில் நியூசிலாந்து மாதிரியான நாடுகளுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தை எட்டும்போது, நியாயமான வர்த்தக நடைமுறைகளை அமல்படுத்த அமெரிக்காவுக்கு மறைமுகமாக இந்தியாவால் அழுத்தம் கொடுக்க முடியும். இப்படி இந்த ஒப்பந்தந்தத்தில் பல நன்மைகள் உள்ளன.