கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம். மாணவர்கள் கடும் பீதி.

கோவை வடவள்ளி அருகே உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் 1000 க்குமேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். பாரதியார் பல்கலைக்கழகம் வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் அடிக்கடி காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து அச்சுறுத்தி வருகின்றன. தற்போது பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தமிழ்த்துறை அலுவலகம் அருகே புதிதாக கட்டிட வேலை நடந்து வருகிறது. இந்த பகுதியில் நேற்று காலை 8 மணி அளவில் சிலர் நடை பயிற்சி சென்றனர். அப்போது சிறுத்தை ஒன்று பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து ஓடியது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து அந்த பல்கலைக் கழக நிர்வாகத்துக்கும் வனத்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. உடனே வனத்துறையினர் விரைந்து வந்து ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சிறுத்தை வந்து சென்றதற்கான கால் தடயங்கள் இருந்தன. தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என்பதை கண்டறிய அந்த பகுதியில் 2 தானியங்கி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அது போன்று வனத்துறையினரும் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் யாரும் நடமாட வேண்டாம் என்று வனத்துறை சார்பில் அறிவுறுத்தப் பட்டுள்ளது..பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை நடமாடியது மாணவர்களிலேயே கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து பல்கலைக்கழகத்திற்கு நேற்று விடுமுறை விடப்பட்டது..