குடும்ப அறுவை சிகிச்சை செய்து 9 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பமான மனைவி : சரியான சிகிச்சை அளிக்காததால் தாய், குழந்தை உயிரிழந்ததாக குற்றச்சாட்டு – கோவை அரசு மருத்துவமனையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு !!!
கோவை அம்மன் குளம் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை – சங்கீதா தம்பதி, கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு, கோவை அரசு மருத்துவமனையில் இரண்டாவது பிரசவம் பார்த்து உள்ளனர். அப்போது குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு சங்கீதா மீண்டும் கர்ப்பமாகிய நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். தாய் மற்றும் கருவில் இருக்கும் குழந்தை இருவரும் மிகுந்த ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து, அறுவை சிகிச்சை அவசியம் என கூறியதாக குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது, 6 மாத குழந்தை இறந்த நிலையில், வெளியே எடுக்கப்பட்ட அதனை அடக்கம் செய்து உள்ளார்.
மீண்டும் சங்கீதாவுக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவர் உயிரிழந்ததாக கணவர் அண்ணாதுரை குற்றம் சாட்டி உள்ளார்.மேலும், அறுவை சிகிச்சை முடிந்த பிறகு தையல்கள் சரியாக போடப்படவில்லை என்றும், தையல் இடங்களில் இருந்து கழிவுகள் வெளியேறும் அளவிற்கு மோசமான மருத்துவ அலட்சியம் நடைபெற்றதாகவும் உறவினர்கள் குற்றச்சாட்டு முன்வைத்து உள்ளனர்.பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு, நேற்று இரவு 1.30 மணி அளவில் சங்கீதா உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து, தாய் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.






