அதிகாரிகளின் அலட்சியம்.. நீதிமன்றத்தில் போராடி வெற்றி .

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை அடுத்த களிமண் குண்டு கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்தப் பகுதியில் உள்ள மக்களின் பிரதான வாழ்வாதாரமாக இருப்பது மீன்பிடித் தொழிலாகும் நாட்டுப் படகு கரைவலை மீனவர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் கடற்கரையை ஒட்டிய சுமார் 100 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பினை அந்தப் பகுதியில் உள்ள செல்வந்தர்கள் சிலர் ஆக்கிரமித்து தோப்பு வைத்து அதன் பின்னர் அந்த வழியே மீனைப் பிடித்து கரைக்கு கொண்டு செல்லும் மீனவர்களுக்கு அதிக இடைஞ்சல் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.குறிப்பாக மீன் பிடித்து கரைக்கு திரும்பியவுடன் கரையில் படகுகளை ஏற்றினால் தகராறு செய்வது மீனை ஏற்றிக்கொண்டு விற்பனைக்கு கொண்டு செல்ல வழி விடாமல் பாதையை அடைத்து வைத்து இடையூறு செய்வது மீன்களை ஏற்றி செல்வதற்காக இருசக்கர வாகனத்திலும் தள்ளு வண்டியிலும் செல்லும் மீனவர்கள் மற்றும் பகுதி வாசிகளை வசை பாடி அச்சுறுத்துவது என தொடர்ந்து இடைஞ்சல் செய்து வந்த ஆக்கிரமிப்பாளர்கள் குறித்து உரிய ஆதாரங்களோடு அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கீழக்கரை வட்டாட்சியரிடம் நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அப்போது ஆட்சியாக இருந்த விஷ்ணு சந்திரனிடம் மனு அளித்துள்ளனர் அந்த மனு தொடர்பாக இம்மி நடவடிக்கை கூட நகர்த்தப்படாததால் மீண்டும் ஆட்சியரிடம் சென்று நடவடிக்கை எடுக்கவில்லையே தங்கள் கொடுத்த மனு மீதான நடவடிக்கை என்ன என்பது குறித்து கேட்டபோது உங்கள் மனுவை குப்பைகள் எல்லாம் போடவில்லை நடவடிக்கை எடுப்போம் என மெத்தனமாக பேசியதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் உடனடியாக ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நேரடியாக அளவெடுத்து ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை செய்தனர். கீழக்கரை வட்டாட்சியர் மக்கள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்திருந்தால் நீதிமன்றம் செல்ல தேவை வந்திருக்காது என்றும் இனிவரும் காலங்களில் அதிகாரிகள் முறையாக மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் .மேலும் 100 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை அரசு மீட்டதோடு அந்த நிலத்தில் விளையாட்டு மைதானம் சாலை சிறுவர் பூங்கா போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.