கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்க நாயக்கன்பாளையம், அண்ணா நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். எலக்ட்ரிக்கல் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் அட்சயா ஸ்ரீ ( வயது 17 )இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்த நிலையில் பிளஸ் 1 பொது தேர்வு வருகிற மார்ச் மாதம் 5 – ந் தேதி தொடங்குகிறது. பொதுத்தேர்வுக்காக தன்னை தயார் படுத்தி வந்தார். இதற்கிடையே நடந்து முடிந்த அரை ஆண்டு தேர்வில் 2 பாடங்களில் அக்ஷயா ஸ்ரீ தோல்வி அடைந்தார்.
இதனால் பிளஸ் 1 பொதுத்தேர்விலும் தோல்வி அடைந்து விடுவோமோ? என்ற பயத்தில் இருந்தாராம். அத்துடன் நேற்று பள்ளியில் வேதியல் செய்முறை தேர்வு நடைபெற்றது. தேர்வு பயம் காரணமாக பள்ளிக்குச் செல்லும் முன் நேற்று காலையில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டுபிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.