பிரதமர் மோடி கோவை வருகை:ட்ரோன்கள் பறக்க தடை-உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை கோவை வருகிறார். இதையொட்டி கோவையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தென்னிந்தியா இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தியும் அதற்கான தொழில் நுட்பங்கள் மற்றும் கொள்கைகளை வகுக்க வலியுறுத்தியும் விவசாயிகள் மாநாடு கோவை கொடிசியா வளாகத்தில் நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகிறார்.இதற்காக அவர் நாளை பிற்பகல் 1:30 மணிக்கு விமான மூலம் கோவை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பின்னர் அவர் அங்கு இருந்து கார் மூலம் மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகத்துக்கு செல்கிறார். அங்கு மாநாட்டை தொடங்கி வைத்து பேசுவதுடன், சிறப்பாக செயல்பட்ட விவசாயிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறார்.இதைத்தொடர்ந்து அவர் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்த்து இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுகிறார்.இந்நிகழ்ச்சியை முடித்துவிட்டு பிரதமர் மோடி மாலை 3.15 மணிக்கு கொடிசியாவில் இருந்து கார் மூலம் புறப்பட்டு கோவை விமான நிலையம் செல்கிறார். அங்கு இருந்து தனி விமான மூலம் டெல்லி செல்கிறார்.

பிரதமர் மோடி கோவை வருகையை முன்னிட்டு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகம் முழுவதும் பிரதமரின் தனி பாதுகாப்பு படை போலீசாரின் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. அங்கு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தரம் தலைமையில் 3,000 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி கொடிசியாவுக்கு வந்து செல்லும் பாதை, கொடிசியா சாலை ஆகியவற்றில் போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.விமான நிலையத்தில் வாகன நிறுத்தும் இடத்தில் வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் மாநாடு நடக்கும் பகுதியில் போலீசார் தீவிர பாதுகாப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சிங்காநல்லூர், எஸ்.ஐ.எஸ்.எஸ் காலனி, சின்னியம்பாளையம், நேரு நகர், காளப்பட்டி, கொடிசியா அரங்கம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் சித்ரா, பீளமேடு, சரவணம்பட்டி, லட்சுமி மில், ராமநாதபுரம், ரேஸ்கோர்ஸ் ஆகிய பகுதிகளில் தற்காலிகமாக ரெட் ஜோன் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தப் பகுதிகளில் இன்று முதல் நாளை இரவு 7 மணி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது தவிர கொடிசியா வளாக மற்றும் கொடிசியா செல்லும் சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மோப்ப நாய் உதவியுடன், சோதனையும் நடத்தி வருகின்றனர்.கோவை மாநகரில் 40 க்கும் மேற்பட்ட பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் முழு சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோன்று நாளை போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு உள்ளது.