பொங்கல் பரிசு ரூ.3,000..?

மிழகத்தில் இந்த ஆண்டு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகையும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கான டோக்கன் விநியோகம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் திருநாளை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக, தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கி வருகிறது. தி.மு.க. அரசு 2021-ல் பொறுப்பேற்ற பிறகு, 2022-ம் ஆண்டு பொங்கலுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 20 வகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுப் பை மற்றும் கரும்பு வழங்கப்பட்டது, ரொக்கம் வழங்கப்படவில்லை. 2023-ம் ஆண்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கரும்புடன் ரூ.1,000 ரொக்கமாக வழங்கப்பட்டது.

அதேபோல் 2024-ம் ஆண்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்புடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த ரொக்கத் தொகை மத்திய-மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் சர்க்கரை அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவில்லை. 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரொக்கம் வழங்கப்படவில்லை, பொங்கல் பரிசுப்பை மட்டும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், வரும் பொங்கல் பண்டிகைக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்படுவதுடன், ரொக்கத் தொகையும் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அந்த தொகை ரூ.1,000, ரூ.2,000, ரூ.3,000 அல்லது ரூ.5,000 ஆக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடும் போது தான் தெளிவாகும். ஆனால், வரும் பொங்கலுக்கு ரொக்கத் தொகை வழங்கப்படுவது உறுதி என கூறப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணமாக வரவிருக்கும் சட்டசபை தேர்தல் குறிப்பிடப்படுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான அறிவிப்பு பிப்ரவரி இறுதியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதனால், தேர்தலை எதிர்கொள்ளும் சூழலில் அரசு ரொக்கத் தொகை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது.

முன்னதாக, 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன், அப்போது ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது. இதனை விட அதிகமாக தி.மு.க. அரசு வழங்கும் என சமூக வலைதளங்களில் தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன. மேலும், எடப்பாடி பழனிசாமியும் பொங்கல் ரொக்கமாக ரூ.5,000 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது தமிழகத்தில் 2 கோடியே 27 லட்சத்து 22 ஆயிரத்து 582 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த அனைத்து கார்டுகளுக்கும் தலா ரூ.3,000 வழங்கினால், அரசுக்கு ரூ.6,817 கோடி செலவாகும். ரூ.5,000 வழங்கினால் ரூ.11,361 கோடி வரை செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000, முதியோர், விதவை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகைகள், நலவாரிய ஓய்வூதியங்கள், 100 யூனிட் இலவச மின்சாரம், பெண்கள் விடியல் பயணம் உள்ளிட்ட பல சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நிதிச்சுமை இருந்தாலும், பொங்கலுக்கு ரொக்கத் தொகை வழங்குவது உறுதி என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் அடிப்படையில், பொங்கல் பரிசுத் தொகை குறித்த அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது தொடர்பாக அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் என்னென்ன பொருட்கள் வழங்குவது என்றும், டோக்கன் விநியோகம் உள்ளிட்ட நடைமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு 7-ந்தேதி டோக்கன் விநியோகமும், 11-ந்தேதி பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியும் தொடங்கியதை போல் இந்த ஆண்டும் நடைபெறுமா அல்லது அதற்கு முன்பே தொடங்குமா என்பது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.