கர்ப்பிணி பலாத்காரமுயற்சி கோவை ரயில் நிலையத்தில் பெண்கள் பெட்டியில் போலீசார் தீவிர கண்காணிப்பு.

கோவை – திருப்பதி ரயிலில் கடந்த 6ம் தேதி, ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணை வாலிபர் ஒருவர் பலாத்காரம் செய்ய முயன்று, தாக்கி கீழே எட்டி உதைத்து தள்ளிவிட்டார். ஓடும் ரயிலில் இருந்து விழுந்த அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட வேலூர் கே.வி.குப்பத்தை சேர்ந்த ஹேமராஜ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவத்தையடுத்து. ரயில்களில் பெண்களுக்கான பாதுகாப்பை தீவிரப்படுத்த தமிழ்நாடு ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு ரயில்வே போலீஸ் டிஜிபி வன்னிய பெருமாள் நேற்று முன்தினம், அனைத்து ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகளுக்கும் ஒரு உத்தரவைபிறப்பித்தார்.

அந்த உத்தரவில், ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், ரயில்கள் புறப்படும் முன்பு அந்த வண்டிகளில் பெண்களுக்கான பயண பெட்டிகளில் தமிழ்நாடு ரயில்வே பெண் போலீசார், பெண் பயணிகள் பாதுகாப்பாக உள்ளனரா? என்பதையும், ஆண் பயணிகள் யாரேனும் அத்துமீறி நுழைந்து இருக்கிறார்களா? என்பதையும் சோதனை செய்ய வேண்டும். பெண் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தைத்தை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். ரயில்வே டிஜிபியின் உத்தரவை அடுத்து, மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் காலை முதல், அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்களில் பெண்கள் பெட்டியில் ரயில்வே போலீசார் சோதனையிட்டு, பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர். அதன் படி கோவை ரயில் நிலையத்தில் டிஎஸ்பி பாபு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மீனாட்சி தலைமையில் ரயில் பெட்டியில் சோதனை செய்ய மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் உள்ள போலீசார், கோவை ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்கள் மற்றும் கோவையில் இருந்து புறப்படும் ரயில்களில் பெண்கள் பெட்டியில் ஏறி தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறியதாவது:

ரயிலில் பெண்கள் பெட்டியில் சோதனை மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ள போலீஸ் குழுக்கள் அனைத்து ரயில்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறைந்த நேரம் நிற்கும் ரயில்கள் வரும் போது பிளாட்பாராத்தில் போலீசார் தயார் நிலையில் நிற்பார்கள். ரயில் வந்ததும் பயணிகள் இறங்கியதும் உடனே ஏறி சோதனை செய்வார்கள். மேலும் பயணிகளுக்கு அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அப்போது பெண்கள் பெட்டியில் ஏதேனும் சந்தேக நபர்களோ, ஆண்களோ இருந்தால் உடனடியாக ரயில்வே போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 1512, 9962 500 500 என்ற எண்ணிற்கு தகவல் கொடுக்கவும், ஜன்னல் ஓரத்தில் அமருவோர் மற்றும் ஜன்னல் பக்கம் தலைவைத்து படுத்து தூங்கும் பெண் பயணிகள் தங்களின் நகைகளை வெளியே தெரியா தவாறு பார்த்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. இரவு நேரங்களில் பயணம் செய்வோர் ரயில் கதவுகளை முடி பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும், சந்தேகப்படும்படியாக கழிவறை கதவுகள் நீண்டநேரமாக உட்புறமாக மூடப்பட்டிருந்தால் கட்டுப்பாட்டு அறை எண்களுக்கு தகவல் கொடுக் கவும் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல இரவு நேர பயணத்தின்போது தங்களின் உடைமைகளை பத்திரமாக பார்த்துகொள்ளுவதுடன், அருகில் உள்ளவர்களின் செயல்களை கண்காணித்தும், பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கோவையில் இருந்து சேலம் வரை செல்லும் ரயில்களில் பெண்கள் பெட்டியில் பயணிகள் குறைவாக இருந்தால் அந்த பெட்டியில் பெண் போலீசார் செல்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம் சென்றதும், அங்கிருந்து கோவை வரும் ரயிலில் அந்த பெண் போலீசார் திரும்பி பெண்கள் பெட்டியில் வருவார் கள். தேவைப்படும் பட்சத்தில் பெண் போலீசாருடன் ஒரு ஆண் போலீசாரும் அனுப்பி வைக்கப் படுவார்கள். ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.