உள்ளாட்சிகளில் ரூ 78 லட்சம் மோசடி. தனியார் நிறுவன ஊழியர் கைது

கோவை ஆகஸ்ட் 5 கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் கலைவாணி. இவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் சாலை பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனம் நடத்தி வருகிறேன். இந்த நிறுவனம் மூலம் உள்ளாட்சிகளில் சாலை பணிகளுக்காக ஒப்பந்தம் பெற்று பணிகளை மேற்கொண்டு உள்ளேன். தொண்டாமுத்தூர், பேரூர், தென்கரை, ஆலந்துறை, நீலகிரி மாவட்டம் சோலூர் பகுதிகளில் எங்களது நிறுவனம் சாலை பணிகளை மேற்கொண்டு வருகிறது .இந்த நிறுவனத்தில்கோவை, ஆர். எஸ். புரத்தை சேர்ந்த என். ராஜன் (வயது 48 | என்பவர் வரவு செலவு கணக்குகளை கவனித்து வந்தார். எனக்கு ஆன்லைன் பணபரிவர்த்தனை விவரங்கள் தெரியாததால் வங்கியில் ஆன்லைன் மூலம் பணம் பரிவர்த்தனை செய்வதற்காக ஊழியர் ராஜனின் செல்போன் எண்ணை வங்கியில் கொடுத்திருந்தார். உள்ளாட்சிகளில் சாலை பணிகள் முடிந்ததும் பணம் பெறுவது ,சாலை பணிக்கான பொருட்களை கொள்முதல் செய்வதற்கு, பணம் அனுப்புவது போன்ற பணிகளை ராஜன் செய்து வந்தார். இந்த நிலையில் அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் வங்கி கணக்குகளை ஆய்வு செய்தோம். அப்போது ரூ.1 கோடியே 11 லட்சம் அளவுக்கு முறைகேடு செய்திருப்பது தெரிய வந்தது. விசாரித்த போது ரூ 33 லட்சம் அளவுக்கு மட்டுமே கணக்குகளை தெரிவித்தார் ரூ. 78 லட்சம் அளவுக்கு பணத்தை மனைவி மற்றும் குடும்பத்தினர் கணக்கிற்கு மாற்றி மோசடி செய்துள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இது குறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு குமரேசன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் செல்வம், சப் இன்ஸ்பெக்டர் பேபி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ராஜன் மோசடி செய்திருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து ராஜன் நேற்று கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.