மதிய உணவு சாப்பிட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்..

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியம் ஊராட்சிக்கு உட்பட்ட ஓடக்கல்பாளையத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு ஓடக்கல்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 142 மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் அரையாண்டு தேர்வு முடிந்து நேற்று பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. மாணவ – மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். தொடர்ந்து மதியம் சத்துணவு – முட்டை பரிமாறப்பட்டது. இதனை 100 க்கு மேற்பட்ட மாணவ – மாணவிகள் சாப்பிட்டனர். இதை யடுத்து மாலை 4 மணிக்கு பள்ளிக்கூட நேரம் முடிந்து வீடு திரும்பும் போது 15 மாணவ – மாணவிகளுக்கு திடீரென்று வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதை யடுத்து வீட்டிற்கு சென்றவர்கள் உட்பட மேலும் 18 மாணவ – மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. தகவல் அறிந்த பெற்றோர்கள் பள்ளிக்கூடத்திற்கு வந்து தங்களது குழந்தைகளை உடல் நலம் விசாரித்தனர். இதற்கிடையே வாந்தி மயக்கம் அடைந்த 33 மாணவ -மாணவிகள் ஆம்புலன்ஸ்களில் அங்குள்ள 3 தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . வாந்தி மயக்கம் ஏற்பட்ட சிகிச்சை பெற்று வரும் 33 பேரில் 16 பேர் மாணவர்கள் 17 பேர் மாணவிகள் ஆவர்கள் . முதற்கட்ட மருத்துவ பரிசோதனையில் பள்ளிக்கூடத்தில் சாப்பிட்ட மதிய உணவு கெட்டுப் போய் இருந்ததாகவும் அதை சாப்பிட்டு மாணவ மாணவிகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து அரசு அதிகாரிகளும் போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.