தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 12 நாட்கள் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளும் வந்தது.
இதனால் பல்வேறு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் விடுமுறையை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை முடிவடைந்த இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நாளில் சென்னைக்கு படையெடுத்தனர்.
இதன் காரணமாக பேருந்து மற்றும் ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் விடுமுறை முடிந்து தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்கள் பாதுகாப்பாக வகுப்பறையில் அமர்வதை உறுதி செய்ய அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை 7 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி தொடர் மொழியால் சுவர்கள் ஈரமாகி இருக்க வாய்ப்புள்ளதால் பள்ளி வளாகத்தில் உள்ள மின் இணைப்புகள், ஸ்விட்ச் போர்டுகள் மற்றும் வயர்களில் ஏதாவது மின் கசிவு உள்ளதா என்பதை திறமையான எலக்ட்ரீசியனை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்.
பள்ளி வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மழையால் பலவீனமாகி உள்ளதா என்று சோதிக்க வேண்டும். இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பகுதிகளுக்கு மாணவர்கள் செல்வதை தடுக்க தடுப்புகள் அமைக்க வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் தரைமட்ட தொட்டிகளை பிளீச்சின் பவுடர் கொண்டு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். மாணவர்களுக்கு காய்ச்சியம் மற்றும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கியிருந்தால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும். புதர்கள் மண்டி கிடந்தால் அவற்றை வெட்டி சுத்தம் செய்ய வேண்டும். டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தேங்காய் ஓடுகள் ஆகியவற்றில் மழை நீர் தேங்கி கொசு மற்றும் புழுக்கள் உற்பத்தியாவதை தடுக்க வேண்டும். கழிவறைகள் மற்றும் சிறுநீர் கழிப்பிடங்களை சுத்தமாக பராமரிப்பதுடன் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது அவசியம். சத்துணவு கூடங்கள் மற்றும் சமையல் அறைகளில் மழை நீர் கசிவு உள்ளதா என்பதை சமையல்காரர்கள் உறுதி செய்த பிறகு சமையல் செய்ய தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.









