சாலையில் அமர்ந்து போராடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆசிரியை ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 31.5.2009-ல் பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கும் அதற்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கும் அடிப்படை சம்பளத்தில் பெரிய அளவில் வேறுபாடு இருந்து வருகிறது. ஊதிய முரண்பாட்டை கண்டித்து சமவேலைக்கு சமஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், டிச.26-ம் தேதி காலை 10.30 மணிக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உள்ளிட்ட கல்வித்துறை அலுவலகங்கள் அமைந்துள்ள டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வளாகத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
போராட்டத்துக்காக வெளியூர்களில் இருந்து வந்த இடைநிலை ஆசிரியர்களை நுங்கம்பாக்கம், எழும்பூர் ரயில்நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் வழிமறித்து போலீஸ் வாகனங்களில் ஏற்றிச்சென்றனர். இந்நிலையில், காலை 11.30 மணியளவில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் மற்றும் நிர்வாகிகள் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்றனர்.
மற்றொருபுறம் ஏராளமானோர் குவியத்தொடங்கினர். அதில் ஒரு பிரிவினர் சாலையில் அமர்ந்து கோஷமிட்டனர். அவர்களை போலீஸார் குண்டுக் கட்டாக தூக்கி போலீஸ் வாகனங்களில் ஏற்றினர்..









