மாணவர்களுக்கு கஞ்சா – போதை மாத்திரைகள் விற்பனை..!

கோவை மாநகர போலீஸ் கமிஷனர்கண்ணன் உத்தரவின்பேரில் கோவை மாநகரம் முழுவதும் கஞ்சா -போதை மாத்திரைகள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா ) விற்பனை செய்பவர்களை பிடிக்க போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் நேற்று இர வு வெள்ளலூர் அவுசிங் யூனிட் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார் அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 5 கிலோ கஞ்சா, 200 போதை மாத்திரைகள் ,8 சிரஞ்சி,22 ஊசி,ஒரு பைக், 3 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் போத்தனூர் மைல்கல் பாரதிநகரை சேர்ந்த ஷாருக்கான் என்ற பெருக்கான் ( வயது 28) போத்தனூர் ஸ்ரீராம் நகர் ,யாசர் முசாபத் என்ற மூசா ( வயது 30) குனியமுத்தூர் காந்திநகர் லத்திப் ( வயது 29 ) என்பது தெரிய வந்தது. விசாரணையில் இவர்கள் கஞ்சா மற்றும் போதை மாத்திரை – ஊசி ஆகியவற்றை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதே போல வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி நேற்று சி.எம்.சி . காலனி பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 3 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணயில் அவர் சி.எம்.சி. காலனியை சேர்ந்த சதீஷ்என்ற சதீஷ்குமார் (வயது 25) என்பது தெரிய வந்தது. மேலும் விசாரணை நடந்து வருகிறது..