தமிழக மக்களின் வாக்குரிமையை பறிக்கும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் குளறுபடிகளை எதிர்த்து, நெல்லையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் இரண்டாவது கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் SIR பணிகள் நவம்பர் 4ம் தேதி தொடங்கப்பட்டது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியபடி 5 கோடி படிவங்கள் தற்போது வீடு வீடாக கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் படி பழைய வாக்காளர்களும், SIR படிவத்தை பூர்த்தி செய்தால் மட்டுமே புதிய வாக்காளராக மாற முடியும். படிவத்தில் குழப்பங்கள் எதுவும் இருந்தால் டிசம்பர் 9 முதல் ஜனவரி 31 வரை திருத்தம் செய்து கொள்ளலாம். இறுதி வாக்காளர் பட்டியல் 2026 பிப்ரவரி 7 வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக மக்களின் வாக்குரிமையை பறிக்கும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR ) குளறுபடிகளை கண்டித்து நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. SIR முறையில் உள்ள குளறுபடிகளை நாங்கள் எதிர்க்கிறோம். மிகவும் குறுகிய காலமே இருக்கும் நேரத்தில், அனைவரின் வாக்காளர் பட்டியலிலும் சீர்திருத்தம் செய்து, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று ! ஏனெனில் கடந்த ஐந்து வருடங்களில் ஆளுங்கட்சி அறிவித்த எந்த ஒரு திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்தவில்லை இந்த நிலையில் SIR இன்னும் ஒரு மாத காலத்திற்குள் முடிப்பது என்பது வாய்ப்பில்லாத ஒன்று ! எனவே மீண்டும் ஒருமுறை நீக்கி அனைவருக்கும் உரிமையான அவர்களின் வாக்கை, அவர்களுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தெரிவித்தனர். மக்களின் வாக்கு உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் SIR பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய மாநில அரசுகளை எதிர்த்தும், தேர்தல் ஆணையத்துக்கு எதிராகவும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.









