கோவையிலிருந்து கேரளாவுக்கு கடத்தல்.!!

கோவை அருகே தமிழக கேரள எல்லையில் உள்ள வாளையார் வேலாந்த வளம் சோதனை சாவடிகளில் போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .இந்த நிலையில் வேலாந்த வளம் சோதனை சாவடியில் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கேரளா நோக்கி மோட்டார் சைக்கிளில் ஒருவர் வேகமாக சென்றார். அவர் போலீசாரை பார்த்ததும் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு திருப்பி சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை துரத்திச் சென்று அப்பாச்சி கவுண்டன்பதி அருகே மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த சபிக் ( வயது 38) நகை வியாபாரி என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்த போது சரியாக பதில் சொல்லவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மோட்டார் சைக்கிள் முழுவதும் சோதனை செய்தனர் .ஆனால் எதுவும் சிக்கவில்லை. பின்னர் மோட்டார் சைக்கிளில் இருக்கையை தட்டி பார்த்தனர். அதில் வித்தியாசமான சத்தம் வந்தது .உடனே போலீசார் அந்த இருக்கையை சோதனை செய்தபோது அதில் ஒரு ரகசிய அறை இருந்ததை கண்டுபிடித்தனர். அதை திறந்து பார்த்தபோது அதற்குள் கட்டு கட்டாக ரூ 56 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது. அதை பறிமுதல் செய்தனர்.அத்துடன் அந்த பணம் எப்படி வந்தது ?என்று கேட்டபோது அவர் தான் நகை வியாபாரி என்றும் கோவையில் நகையை விற்றுவிட்டு பணத்தை திரும்ப கொண்டு செல்வதாக கூறினார். அந்த பணத்திற்கான ஆவணத்தை கேட்டனர். ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை . இதையடுத்து போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்ததும் ரூ. 56 லட்சத்து 50 ஆயிரத்தையும் சபிக்கையும் வருமானத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர் . அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் கடத்திச் சென்றது ஹவாலா பணமா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.