இன்று தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை? 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

தென்மேற்கு பருவமழை மே 13ம் தேதி அந்தமான் கடல் பகுதியில் தொடங்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை மே 13ம் தேதியான இன்று தொடங்க வாய்ப்புள்ளது. எப்போதும் தென்மேற்கு பருவமழை மே மாதம் கடைசி வாரத்தில் தொடங்கும். ஆனால், இந்த முறை முன்கூட்டியே தொடங்க உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையின் போது தமிழகத்திற்கு முழுவதுமாக மழை கிடைக்காவிட்டாலும் தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் நல்ல மழை கிடைக்கும்.இந்நிலையில் மேற்கு திசைவேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  அதேபோல் நாளை  நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.