கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில், மக்கள் சேவை மையம் சார்பில், சுயம் என்ற பெண் தொழில் முனைவோர்களுக்கு உதவும் வகையில், ஒருநாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “மக்கள் சேவை மையம் சார்பில் சுயம் என்ற திட்டத்தின் கீழ், பெண் தொழில் முனைவோர்களுக்கு உதவும் வகையில் ஒருநாள் பயிற்சி பட்டறை நடத்தப்படுகிறது. இதில் பெண்கள் தொழில் துவங்குதல், வங்கி கடன் பெறுதல் உள்ளிட்ட உதவிகளை எப்படி பெறுவது என விளக்கப்படுகிறது.
கோவை அதிக தொழில் வாய்ப்பு தரும் மாவட்டமாக உள்ளது. பெண்கள் தொழில் துவங்க மற்ற இடங்களை விட உகந்த இடமாக கோவை உள்ளது. அதிக பெண் தொழில் முனைவோர்களை உருவாக்குவதன் மூலம், நாட்டின் வளர்ச்சியை அதிகரிப்பது எங்கள் குறிக்கோள். அடுத்தகட்டமாக ஆயிரக்கணக்கான பெண் தொழில் முனைவோர்களை உருவாக்குவதும், இருக்கும் தொழில் முனைவோர்களுக்கும் உதவுவது எங்கள் நோக்கம். மத்திய அரசு திட்டங்கள் மூலம் பெண் தொழில் முனைவோர்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.









