“உங்கள் கனவை சொல்லுங்கள்” புதிய திட்டம்..!!

திருவள்ளூர், ஜனவரி 9, 2026: ‘உங்கள் கனவை சொல்லுங்கள்’ என்ற திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருவள்ளூரில் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் இதுவரை எந்த அரசும் மேற்கொள்ளாத ஒரு புதிய முயற்சியை திமுக அரசு தற்போது தொடங்கி வைக்க உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில மாதங்கள் மட்டுமே உள்ள சூழலில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் ஆளும் திமுக அரசு அடுத்த முறையும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்களையும், புதிய புதிய திட்டங்களையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில், ‘உங்கள் கனவை சொல்லுங்கள்’ என்ற திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த திட்டத்தினை அவர் தொடங்கி வைக்கிறார். ‘உங்கள் கனவை சொல்லுங்கள்’ திட்டம் என்பது ஒவ்வொரு குடும்பத்தின் கனவுகளையும் கேட்டறியும் ஒரு புதிய முயற்சியாகும். இது தொடர்பாக பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு என்ன வேண்டும், தங்கள் ஊருக்கு என்ன வேண்டும், மாவட்டத்தில் உள்ள குறைகள் என்ன என்பதற்கான கனவுகள் இருக்கும் என்றும், அதேபோல் தங்கள் ஊர் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவுகள் அனைவருக்கும் இருக்கும் என்றும் கூறினார். அந்த கனவுகளை அறிந்து கொள்வதற்காகவே இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் கனவுகளையும் அறிந்து கொள்ள அரசு விரும்புகிறது. இதற்காக 50,000 தன்னார்வலர்கள் பயிற்சி அளிக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளனர். இந்த தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று குடும்ப விவரங்களை சேகரித்து, எந்தெந்த அரசுத் திட்டங்களால் அவர்கள் பயன் பெறுகிறார்கள் என்பதையும், அவர்களது கனவுகள் என்ன என்பதையும் பதிவு செய்வார்கள். அதேபோல், ஒரு நபர் அதிகபட்சமாக மூன்று முக்கிய கனவுகளை பதிவு செய்ய முடியும். அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்துவமான குறியீடு வழங்கப்படும். இதற்கிடையில், 15 முதல் 29 வயது வரையிலான இளைய சமுதாயத்தினரின் கனவுகளை தனியாக இணையதளம் மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் வசித்து வரும் அகிலத்தமிழர்களின் கனவுகளும் ஜனவரி 12 முதல் பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ‘உங்கள் கனவை சொல்லுங்கள்’ திட்டத்தின் மூலம் பெறப்படும் தகவல்கள் அனைத்தும் முழுமையாக டிஜிட்டல் முறையில் சேகரிக்கப்பட்டு, தனித்துவமான தரவுத்தளமாக உருவாக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களை வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.