புதுடெல்லி: காஷ்மீர் புல்வாமா மாவட்டம் குல்காமின் காஜிகுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் ஆதில் அகமது.
இவர், உ.பி. சஹாரன்பூரில் பிரபல தனியார் மருத்துவமனையில் பணியாற்றினார். தீவிரவாத சதி தொடர்பான சந்தேகத்தின் பேரில், காஷ்மீர் போலீஸார் கடந்த 6-ம் தேதி சஹாரன்பூருக்கு வந்து ஆதிலை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காஷ்மீர் அனந்தநாக் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 ஆண்டுகள் பட்டமேற்படிப்பு படித்தது தெரிய வந்தது. மருத்துவமனையில் காலி செய்யாமல் வைத்திருந்த ஆதில் லாக்கரிலும் சோதனை நடத்தப்பட்டது. அதில், ஏகே 47 துப்பாக்கி உள்ளிட்ட சில சட்டவிரோத பொருட்கள் சிக்கின. சஹாரன்பூர் மருத்துவமனையில் ஆதில் ரூ.5 லட்சம் மாத ஊதியம் பெற்றுள்ளார். கடந்த அக்டோபர் 4-ம் தேதி ஆதிலுக்கு திருமணம் நடந்துள்ளது. அப்போது குறிப்பிட்ட சிலரை மட்டுமே அவர் திருமணத்துக்கு அழைத்துள்ளார். அவர்களில் முக்கியமானவராக கருதப்படும் மருத்துவர் பாபர் அகமதுவிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.









