திருநெல்வேலி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) இரண்டு நாட்கள் நடைபெற்றது.பாளையங்கோட்டை புனித சவேரியார் மேல்நிலைப் பள்ளியில், பட்டதாரித் தமிழாசிரியரான தந்தையும், அவரது மகனும் இந்த தகுதி தேர்வை எழுதினர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில், அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் உமர் பாரூக். 50 வயதான இவர், 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் தகுதித் தேர்வு (TET) எழுத வேண்டும் என்ற நிர்பந்தத்தின் காரணமாக, இந்தத் தேர்வை எழுதினார்.இவருடன், புதிய ஆசிரியர் பணியிடத்தை நாடி, அவரது மகன் தானிஷ் (வயது 22),இந்த இரண்டாம் தாள் தேர்வை அதே மையத்தில் எழுதினார் .
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆசிரியர் உமர் பாரூக், “எனக்கு 50 வயதாகிறது. எனது மகனும் இன்று தகுதித் தேர்வு எழுதினார். தந்தையாகிய நானும், மகனும் ஒரே நேரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதுவது ஒருபுறம் நெருடலாக இருந்தாலும், மறுபுறம் உற்சாகமாக உள்ளது” என தெரிவித்தார்.
அவர் திருக்குறளை மேற்கோள் காட்டி, “*தந்தை மகற்காற்றும் உதவி, அவையத்து முந்தி இருப்பச் செயல்*” என்ற வரிகளை நினைவு கூர்ந்தார். தனது மகன் 10 ஆம் வகுப்பு படித்த போது, தான் அவருக்கு வகுப்பாசிரியராக இருந்ததாகவும், இன்று அதே மகனுடன் சக ஆசிரியராகும் வாய்ப்பு கிடைத்திருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார்.
தானிஷ் பேசுகையில், “என் அப்பா எனக்கு வகுப்பாசிரியராக இருந்தார். அவரை ஒரு உந்துசக்தியாக எடுத்துக்கொண்டு, அவருக்கு ஈடாக ஒரு சக ஆசிரியராக ஆகப் போகிறேன் என நினைக்கும் போது, ரொம்ப பெருமையாக இருக்கிறது. என்னைப் படிக்க வைத்து, இப்போது என்னுடன் தகுதித் தேர்வு எழுத அப்பா தான் எனக்கு வழிகாட்டினார்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.









