தமிழகத்தில் 2025-26ஆம் கல்வியாண்டின் மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் விநியோகம் செய்யும் பணிகளைப் பள்ளிக்கல்வித்துறை முடுக்கிவிட்டுள்ளது. அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பத் தேவையான புத்தகங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாகப் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கை மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பாடப்புத்தகங்களைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்து கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், விநியோக மையங்களில் புத்தகங்கள் முறையாகப் பெறப்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் முதலில் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்களிடம் புத்தகங்களை ஒப்படைக்கும்போது, அதற்கான விவரங்களை வழங்கல் பதிவேட்டில் (Issue Register) துல்லியமாகப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புத்தகங்களை ஏற்றி இறக்கும் பணிகளிலோ அல்லது விநியோகப் பணிகளிலோ ஆசிரியர்களையும் மாணவர்களையும் எக்காரணம் கொண்டும் ஈடுபடுத்தக் கூடாது என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களுக்குப் புத்தகங்கள் வழங்கப்பட்ட விவரங்களை உடனுக்குடன் ‘எமிஸ்’ (EMIS) இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் முதல் நாளிலேயே, எவ்விதத் தாமதமுமின்றி மாணவர்களின் கைகளில் மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் கிடைப்பதை அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.









