கோவை, ஜூலை 5கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (34). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நகை பட்டறையில் வேலை செய்த வருகிறார். இவரது தங்கை தனது கணவரை பிரிந்து மகனுடன் ரமேஷ் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் ரமேசின் தங்கைக்கு செட்டி வீதி கேசி தோட்டத்தை சேர்ந்த கதிர்வேல் என்கிற சிங்கா (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் நெறுங்கி தொடர்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதுகுறித்து ரமேசுக்கு தெரியவந்து தங்கையை அவர் கண்டித்து வந்துள்ளார். இதனால் அவரது தங்கை, கதிர்வேலுடன் பழகுவதை குறைத்து கொண்டார். இதனால் கதிர்வேல், ரமேஷ் மீது கோபத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கதிர்வேல், ரமேசின் வீட்டிற்கு சென்று அவரது தங்கையை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு ரமேஷ் மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. அதில் ஆத்திரம் அடைந்த கதிர்வேல் தகாத வார்த்தைகளால் திட்டி ரமேசை சரமாரியாக தாக்கினர். மேலும் கீழே கிடந்த கல்லை எடுத்து ரமேசின் மண்டையை உடைத்தார். பின்னர் மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார். பலத்த காயம் அடைந்த ரமேசை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ரமேஷ் செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் கதிர்வேல் என்கிற சிங்கா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.