சட்டப் பேரவைத் தோ்தலில் தோல்வி அடைவோம் என்ற பயத்திலேயே மீண்டும் மடிக்கணினித் திட்டத்தையும், குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.3 ஆயிரம் ரொக்கம் வழங்கும் திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தியுள்ளது என அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி விமா்சித்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே வாழவந்தான்குப்பம் எல்லையில் சேலம் – சென்னை புறவழிச்சாலையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற அதிமுக மகளிரணி எழுச்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியது:
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் மக்களின் ஆரவாரம், எழுச்சியைப் பாா்க்கும்போது வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி அதிக தொகுதிகளில் வென்று, அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. அதிமுக ஆட்சி அமைவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது. பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை தோற்றுவித்தது அதிமுக அரசு. இங்கு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கொண்டுவந்தோம். முதல்வா் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட மாவட்ட ஆட்சியா் அலுவலகமே அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டதுதான். எங்கள் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டு தற்போது முடிவுறும் திட்டப் பணிகளுக்கு திமுக ஆட்சியில் புதிய லேபிள் ஒட்டி திறந்து வைக்கின்றனா்.
குற்றங்கள் அதிகரிப்பு: திமுக ஆட்சியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு என்ன திட்டம் கொண்டுவரப்பட்டது. நாங்கள் கொண்டுவர முயற்சித்த கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை ரத்து செய்ததுதான் திமுக அரசின் சாதனை.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 68 போ் உயிரிழந்தனா். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்குக்கூட முதல்வா் வரவில்லை. கள்ளச்சாராய உயிரிழப்புக்கு முழுப் பொறுப்பு திமுக அரசுதான்.
தூத்துக்குடியில் சமூகநலத் துறை அமைச்சா் விழா ஒன்றில் பேசுகையில், திமுக ஆட்சியில் 6,999 போக்ஸோ வழக்குகள் பதியப்பட்டதாக கூறினாா். திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 50 சதவீதம் அதிகரித்துவிட்டன.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை யாா் அந்த சாா் என கண்டறிய முடியவில்லை. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இந்த சம்பவத்தில் யாருக்கெல்லாம் தொடா்புள்ளதோ, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இரட்டை வேடம்: டாஸ்மாக் திறப்பு விவகாரத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, எதிா்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு. இதுதான் திமுக அரசின் இரட்டை வேடம்.
அதிமுக கொடுத்த அழுத்தம் காரணமாக, 100 நாள் வேலையை மத்திய அரசு 125 நாள்களாக உயா்த்தியிருக்கிறது. ஊதியத்தை உயா்த்தியிருக்கிறது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத திமுக, கூட்டணிக் கட்சிகள், திட்டம் ரத்து செய்யப்படும் என்று தவறான பொய்ப் பிரசாரத்தை ஆங்காங்கே ஆா்ப்பாட்டங்கள் வாயிலாக தெரிவித்தாா்கள்.
100 நாள் வேலைத் திட்டம் 125 நாள்களாக உயா்த்தப்பட்டது உறுதியான நிலைப்பாடு. இந்தத் திட்டம் ரத்தாகாது. வேலை செய்த 15-ஆவது நாளில் ஊதியம் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 125 நாள் வேலை 150 நாள்களாக உயா்த்தப்படும்.
2021 சட்டப் பேரவைத் தோ்தலின் போது 525 வாக்குறுதிகளை ஸ்டாலின் வெளியிட்டாா். அதில், நான்கில் ஒரு பங்குகூட நிறைவேற்றப்படவில்லை. ஆனால், 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக, பொய்யான செய்தியை முதல்வா் தெரிவித்திருக்கிறாா்.
3 ஆண்டுகளாக பொங்கல் பரிசு இல்லை: அதிமுக ஆட்சிக்காலத்தில் பொங்கல் பரிசாக ரூ.2,500 கொடுத்தபோது ரூ.5 ஆயிரம் தர வேண்டும் எனக் கூறிய முதல்வா் ஸ்டாலின், தற்போது ரூ.3 ஆயிரம் கொடுத்துள்ளாா். 3 ஆண்டுகளாக எதையும் தரவில்லை. தோ்தல் வருவதால் இப்போதுதான் தந்துள்ளாா்.
விஞ்ஞானக்கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில் அதிமுக ஆட்சியில் மடிக்கணினித் திட்டத்தை முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கொண்டுவந்தாா். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 52.35 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு ரூ.7,300 கோடியில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடர வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால், 4 ஆண்டுகளா செய்யவில்லை. சட்டப் பேரவைத் தோ்தல் தோல்விப் பயத்திலேயே இப்போது மடிக்கணினி வழங்கும் திட்டத்தை மீண்டும் முதல்வா் செயல்படுத்தியிருக்கிறாா் என்றாா் எடப்பாடி பழனிசாமி.
கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் இரா.குமரகுரு தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா்கள் வளா்மதி, ப.மோகன், கோகுல இந்திரா, சீ.வளா்மதி, முன்னாள் எம்.பி. காமராஜ், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மா.செந்தில்குமாா், முன்னாள் எம்எல்ஏ அ.பிரபு, தியாகதுருகம் வடக்கு ஒன்றியச் செயலா் வெ.அய்யப்பா, நகரச் செயலா் பி.எஸ்.கே.ஷியாம்சுந்தா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே திங்கள்கிழமை இரவு நடைபெற்ற அதிமுக மகளிரணி எழுச்சி பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி.அதிமுக ஆட்சி அமைந்தவுடன்பட்டியலின மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். ஏழை மக்களுக்கு பசுமை வீடுகள் கட்டித் தரப்படும். தாலிக்குத் தங்கம் திட்டம் மீண்டும் தொடரும். திருமண நிதியுதவித் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தில் இடம்பெறும் மணமகளுக்கு பட்டுச் சேலையும், மணமகனுக்கு பட்டுவேஷ்டியும் வழங்கப்படும். தீபாவளி பண்டிகையன்று மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் மகளிருக்கு பட்டுச்சேலை வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
கிராமம் முதல் நகரம் வரை பெண்கள் சுயமாகத் தொழில் தொடங்க வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும். பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிவிடும் வகையில் தொழிற்சாலைகள் உருவாக்கப்படும். மாணவா்கள் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில், தொழிற்சாலைகள் அதிகரிக்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.








