கோவை அவினாசி ரோட்டில் உள்ள பழைய மேம்பாலம் ரவுண்டானா ரூ. 5 கோடியில் விரிவாக்கம்

கோவை ஆகஸ்ட் 8 கோவை அவிநாசி ரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பழைய மேம்பால ரவுண்டானாவை ரூ 5 கோடியில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அவிநாசி ரோடு உப்பிலிபாளையத்தில் பழைய மேம்பாலம் உள்ளது .இது கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. மில் ரோடு, புரூக் பாண்ட் ரோடு ஆகியவற்றை இணைக்கும் வகையில் இந்த மேம்பாலம் உள்ளது. இதில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மழைக்காலங்களில் மேம்பாலத்தின் சுரங்க வழித்தடங்களில் மழைநீர் தேங்கினால் வாகனங்கள் செல்ல முடியாது. அப்போது அனைத்து வாகனங்களும் மேம்பாலம் வழியாக திருப்பி விடப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது தவிர காலை – மாலை நேரங்களில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு சமையல் கியாஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி அந்த மேம்பாலத்தில் திரும்ப முடியாமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் நடந்துள்ளது. எனவே அந்த மேம்பாலத்தை விரிவுபடுத்தும் பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறையினரே மேற்கொள்ள முடிவு செய்தனர் .அதற்கான நடவடிக்கைகளை தீவிர படுத்தி உள்ளனர் .இது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி தனபால் கூறியதாவது:- அவிநாசி சாலை பழைய மேம்பாலத்தின் ரவுண்டானாவை விரிவாக்கம் செய்வது ,அருகில் உள்ள சாலைகளை சீரமைப்பது என ரூ 20 கோடியில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது .அது தொழில் நுட்ப ஒப்புதலுக்காக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது .இதில் ரவுண்டானா விரிவாக்கம் மட்டும்ரூ 5 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது .திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்ததும் நிதியும் ஒதுக்கப்பட்டு விடும் மேம்பாலத்தில் ரவுண்டானா இரு வழித்தடமாக உள்ளது. ரவுண்டா னாவின் பக்கபாட்டு பகுதியில் 3 -வதாக மேலும் ஒரு பாதை அமைத்து விரிவாக்கம் செய்யப்படும். ரவுண்டானாவின் மையப்பகுதியில் உள்ள இடைவெளி குறைக்கப்படாது. வாகனங்கள் வெளியேறும் நுழைவாயில் நெருக்கடியின்றி வாகனங்கள் திரும்பிச் செல்லும் வகையில் சீரமைக்கப்படும். இந்த பணியுடன் சேர்த்து 5 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை சீரமைப்புபணியும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.