கிணற்றில் தவறி விழுந்து காட்டு யானை பரிதாபசாவு.

கோவை ஆகஸ்ட் 1 கோவை ஆலாந்துறை பக்கம் உள்ள நல்லூர் வயல்,சோலை படுகை அருகே நிர்மலா என்பவரின் தோட்டத்திற்குள் அதிகாலையில் 3 யானைகள் புகுந்தது. அந்த யானை தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே பப்பாளி மரத்திலிருந்து பழங்களை பறித்து சாப்பிட முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக காட்டு யானை கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. தகவல் அறிந்தது அந்த பகுதி மக்கள் திரண்டு வந்தனர். பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் அங்கு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. அதில் கயிறு கட்டி காட்டுயானையை மீட்கும்பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதற்கிடையில் அந்த யானை மூச்சு திணறி கிணற்றின் உள்ளே பரிதாபமாக இறந்தது. வனத்துறையினர் 2 மணி நேரம் போராடி பொக்லைன் உதவியுடன் யானையின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். வனத்துறையினர் யானையின் உடலை வாகனம் மூலம் கோவை குற்றாலம் வனபகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு கால்நடை மருத்துவர்கள் முன்னிலை யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அங்கே அடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்த யானை35 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை என வனத்துறையினர் தெரிவித்தனர். தோட்டத்தில் புகுந்த காட்டு யானை பப்பாளிப்பழம் பறிக்க முயன்ற போது கிணற்றினுள் தவறி விழுந்து இறந்த சம்பவம் வன ஆர்வலர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.