சுட்டு பிடிக்கப்பட்ட 3 நபர்களில் 1 நபர் உயிரிழப்பு!நீதிபதி விசாரணை!

கோவையில்  சுட்டு பிடிக்கப்பட்ட 3 வட மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்களில் ஆசிப் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

கோவை கவுண்டம்பாளையம் வீட்டு வசதிவாரிய அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த வெள்ளிக்கிழமை 13 வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை நடைபெற்றது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில், வட மாநில கொள்ளையர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. குனியமுத்தூர் அருகே குளத்துப்பாளையம் பகுதியில் பதுங்கி இருந்த கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற பொழுது, அவர்கள் போலீசாரை தாக்கினர். இதில் பார்த்திபன் என்ற காவலர் காயமடைந்தார்.இதனையடுத்து வட மாநில கொள்ளையர்கள் மூன்று பேரையும்
நேற்று காலை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆசிப், இர்ஃபான், கல்லு என்பது தெரியவந்தது.கோவை அரசு மருத்துவமனையில் 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட வந்தது. இதில் வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த ஆசிப் என்பவருக்கு தொடர்ந்து ரத்தப்போக்கு ஏற்பட்டது.இதனையடுத்து அவர் ஐசியூ வார்டில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது . இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று நண்பகல் 11.30 மணியளவில் ஆசிப் உயிரிழந்தார்.

தொடர்ச்சியாக ரத்தம் வெளியேறியதால் உயிரிழப்பு என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் சிகிச்சையின் பொழுது கொள்ளையன் உயிரிழந்தது குறித்து நீதிபதியும் விசாரணை மேற்கொள்ள இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்காக கொள்ளையன் ஆசிப்பின் உடல் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.