கோவையில் மழை மற்றும் வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை கிடு , கிடுவென உயர்ந்து உள்ளது.ஒரு கிலோ தக்காளி ரூபாய் 80 க்கு விற்பனையானது.
கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு, பேரூர், தீத்திபாளையம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் தக்காளி கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் மார்க்கெட் மற்றும் கிணத்துக்கடவு மார்க்கெட் விற்பனை செய்யப்படுகின்றது.

கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மார்க்கெட்டுக்கு வரும் தக்காளி வறுத்து குறைந்துவிட்டது. இதனால் தக்காளியின் விலை கிடு கிடுவென உயர்ந்து கிலோ ரூபாய் 80 விற்பனையாகி வருகிறது.வியாபாரிகள் இது குறித்து கூறும் போது கிணத்துக்கடவு, நாச்சிபாளையம், காளம்பாளையம், ஆலாந்துறை மற்றும் கர்நாடகா, மங்களூரில் இருந்து கோவைக்கு தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கர்நாடகாவில் கடந்த இரண்டு வாரங்களாக மழை பெய்கிறது.

கோவை புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவை மார்க்கெட்டுகளுக்கு வரும் தக்காளி வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. முன்பு 100 டன் தக்காளி வரத்து தற்பொழுது 40 டன் முதல் 50 டன் வரையே தக்காளி வருகிறது. குறிப்பாக கர்நாடகாவில் இருந்து வரும் தக்காளி வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. கேரளா வியாபாரிகளும் இங்கு வந்து கொள்முதல் செய்வதால், தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. தற்பொழுது ஒரு கிலோ தக்காளி ரூபாய் 80 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர். தக்காளி விலை உயர்ந்ததால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.









