இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வட்டாரத்தில் தமிழ்நாடு வேளாண்மைத்துறை மற்றும் வேளாண்மை பல்கலைகழக வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கிசான் கோஸ்தீஸ் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மண்டபம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் செல்வம் முன்னிலை வகித்தார். வேளாண்மை அலுவலர் உழவர் பயிற்சி நிலையம் 100 க்கும் மேற்பட்ட விவசாயி பெருமக்கள் மற்றும் அலுவலர்களை வரவேற்று பேசி நிகழ்சியினை துவக்கி வைத்தார். வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் வள்ளல் கண்ணன் விவசாயிகளுக்கு கோடைக்காலத்தில் மேல் மண் அதிக வெப்பமடைந்து, நிலத்தடி நீர் ஆவியாகி வெளியேறுகிறது. ஆகவே விவசாயிகள் கோடை உழவு செய்ய வேண்டும்.
கோடை உழவு செய்வதனால் மேல் மண் உழவு செய்யப்பட்டு புழுதிப்படலம் அமைக்கப்படுகிறது, இதனால் நீர் ஆவியாகாமல் பாதுகாக்கப்படுகிறது. மண் துகள்களாகி வெப்பத்தை உறிஞ்சி விரைவில் குளிர்கிறது இதனால் நீர் ஊர்தல் திறன் அதிகரித்து மண்ணில் காற்றோட்டம் ஏற்படுகிறது. வயலில் உள்ள களைகள் வெளி கொணரப்பட்டு சூரிய ஒளியில் உலர்ந்து அழிக்கப்படுகின்றன. மேலும் பயிர்களுக்கு நோய் உண்டாக்கும் காரணிகளாண பூச்சிகள் மற்றும் கூண்டு புழுக்கள் கோடை உழவின் பொழுது வெளிக்கொணரப்பட்டு சூரிய ஒளியில் அழிக்கப்படுகின்றன. அறுவடை செய்யப்பட்ட வயல்களில் உள்ள பழைய தாள்கள், வேர்கள், தட்டைகள் மண்ணில் மடக்கி உழும் பொழுது மண்ணிற்கு தேவையான தழைச்சத்து கிடைக்கப்பெறுகிறது. மேலும் நுண்ணுயிர்களின் செயல்பாடு மேம்பட்டு, மண்வளம் அதிகரிக்கிறது. எனவே விவசாயிகள் அனைவரும் கோடை உழவு மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.
இணை பேராசிரியர் முனைவர் ஜெகதீசன் நெல் சாகுபடிக்கு பின் இரண்டாம் போக சாகுபடியாக பயறு வகைப்பயிர்களான உளுந்து, பாசிப்பயறு தட்டைபயறு சாகுபடி குறித்து விவசாயிகளிடையே விளக்கி பேசினார். வேளாண்மை உதவி இயக்குநர் நாகராஜன் தகவல் மற்றும் தரக்கட்டுபாடு இராமநாதபுரம் விவசாயிகளிடையே மண்மாதிரி சேகரிப்பு செய்வதன் அவசியம் மற்றும் மண்வள அட்டையின்படி உரப்பரிந்துரைகளை பின்பற்றும் முறைகள் குறித்து விளக்கி பேசினார். வேளாண்மை அலுவலர் சீதாலட்சுமி உழவர் பயிற்சி நிலையம் பரமக்குடி நிகழ்சியில் கலந்து கொண்டு நெல் சாகுபடியினை தொடர்ந்து மிகக் குறைந்த நீர் ஆதாரம் தேவைப்படும் பயிர்களான பயறுவகைகள் மற்றும் சிறுதானியங்களை சாகுபடி செய்ய வேண்டும் என தெரிவித்தார். மேலும் பசுந்தாள் மற்றும் பசுந்தழை உரப்பயிர்களான தக்கைப்பூண்டு, சணப்பு பயிர்களை பயிரிட்டு பூக்கும் தருணத்தில் மடக்கி உழவு செய்வதனால் மண்வளமாக்கப்பட்டு மண்ணிற்கு தேவையான தழைச்சத்து கிடைக்கபெறுகிறது என கூறினார். வேளாண்மை அலுவலர் மோனிஷா உச்சிப்புளி விவசாயிகள் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பதிவு தரவு செய்வதற்கு ஏப்ரல் 30 கடைசி நாளாகும் என தெரிவித்தார். விவசாயிகள் வயல்வெளி அழைத்து செல்லப்பட்டு வேளாண் அறிவியல் நிலையத்தில் சாகுபடி செய்யப்பட்ட ஏ.சு.டி-53 நெல் மற்றும் தக்கைப்பூண்டு, சணப்பு வயல்களை பார்வையிட்டனர். இந்நிகழ்சியில் உதவி தொழில்நுட்ப மேலாளர் சோனியா, மண்டபம் வட்டாரத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.