முன் அறிவிப்பின்றி பாதாள சாக்கடை தோண்டும் பணி.!!

கோவை ராமநாதபுரம் சுங்கம் பகுதியில் பாதாள சாக்கடை பணி நடைபெறுவதால் சுங்கம் ரவுண்டானா அருகே 3 பக்கமும் குழி தோண்டப்பட்டுள்ளது. முன் அறிவிப்பு இல்லாமல் நேற்று இரவு சாலை தோண்டப்பட்டதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள் .அந்த பகுதியில் திடீரென சாலை அடைக்கப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாற்று வழிகளிலும் வாகனங்கள் குவிந்தன. இதனால் வாகனங்கள் பாலத்தின் மேல் திருப்பி விடப்பட்டதால் சுங்கம் ராமநாதபுரம் பகுதிகளில் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். நீண்ட நேரம் பேருந்துகள் வராததால் வேலைக்கு செல்பவர்கள் மாணவ, மாணவிகள் முதியோர்கள் பாதிக்கப்பட்டனர். முன் அறிவிப்பு இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இனி வரும் காலங்களில் முன்கூட்டி தகவல் வழங்கி ,மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.