நள்ளிரவில் வீட்டை இடித்து தள்ளி வனத்துறையினரை கதிகலங்க வைத்த காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில், காட்டு யானைகள் தற்போது அதிகளவில் கூட்டாகவும், தனித்தனியாகவும் நடமாடி வீடு மற்றும் கடைகளை உடைத்து சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் சூடக்காட்டுபாடி தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில், இரவு சுமார் 11 மணியளவில் நுழைந்த நான்கு யானைகள் கொண்ட காட்டு யானைகள் கூட்டம், அங்குள்ள வீட்டு கதவுகளை உடைத்து உள்ளது. சத்தம் கேட்டு அலறியடித்து எழுந்த தொழிலாளர்கள், பிற தொழிலாளர்களையும் பாதுகாப்பாக வரவழைத்து, அருகே உள்ள குடியிருப்பில் தஞ்சமடைந்தனர். வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து சென்ற மனித வனவிலங்கு மோதல் தடுப்பு குழுவினர், அந்த யானைகளை விரட்ட முற்படும் போது, அந்த யானை பிளிறியவாறு, ஆக்ரோஷமாக மேலும் இரண்டு வீட்டின் சுவற்றை இடித்து சேதப்படுத்தியது .தொடர்ந்து பெரும் முயற்சியில் ஈடுபட்ட வனத்துறையினர், நீண்ட நேரத்திற்கு பின்னர் அந்த யானைகளை அருகே உள்ள வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் தூக்கமின்றி அச்சத்துடனே விடியும் வரை காத்திருந்து, பின் நிம்மதி அடைந்துள்ளனர். இச்சம்பவம் அறிந்து அப்பகுதிக்கு சென்ற எஸ்டேட் உதவி மேலாளர் மகேந்திரன், ஃபீல்டு ஆபிசர் மாரியப்பன் ஆகியோர் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு, உடனடியாக சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.






