வால்பாறை நகராட்சி நகர்மன்ற கூட்டம் ரத்து

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் நகர் மன்ற கூட்டம் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தலைமையில் நகராட்சி ஆணையாளர் ரகுராமன், நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் நேற்று காலை தொடங்கியது .ஆனால் நகர் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் யாரும் தங்களின் இருக்கைகளில் அமராமல் ஒரு குழுவாக ஒன்று கூடி கூட்டத்தில் கலந்து கொள்ளாத நிலையில் நகர்மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் இருவரும் வெகுநேரம் காத்திருந்து கூட்டத்தை நடத்த ஒலிபெருக்கி மூலம் அழைத்தும் உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணிப்பு செய்து வராத நிலையில் இருவரும் உறுப்பினர்களின் அருகில் சென்றனர். அப்போது அங்கு அமர்ந்திருந்த 15 வது வார்டு திமுக நகர்மன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் தமிழக முதல்வர் குறித்து நகராட்சி ஆணையாளர் ரகுராமன் தவறாக பேசியதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி ஆவேசமடைந்தார் இது உறுப்பினர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாலை மூன்று மணிக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது .அதைத்தொடர்ந்து மாலை மூன்று மணிக்கு நகர்மன்ற உறுப்பினர்கள் யாரும் கூட்டத்திற்கு வராததால் நகர்மன்ற தலைவரால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
மேலும் வால்பாறை நகராட்சியில் உள்ள 21 வார்டு உறுப்பினர்களில் நான்கு பேர்கள் மன்றத்திற்கு வரவில்லை எனினும் 4 வது வார்டு திமுக உறுப்பினர் ஜே.பாஸ்கர் மற்றும் 21 வார்டு திமுக உறுப்பினர் உமா மகேஸ்வரி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ள தங்களின் இருக்கையில் அமர்ந்திருந்த நிலையில் மீதமுள்ள 12 திமுக உறுப்பினர்கள் மற்றும் ஒரு அதிமுக உறுப்பினர் உட்பட 13 பேர்கள் நகர்மன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் கூட்டத்தை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.