காட்டு யானை தாக்கி பெண் சாவு

கோவை ஜூலை 18 கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசிபுரம் சவுக்கு காடுபகுதியைச் சேர்ந்தவர் ஜீவன். இவரது மனைவி செல்வி ( வயது 24) இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நரசிபுரத்தில் இருந்து கோசாலை செல்லும் வழியில் சுந்தர பெருமாள் கோவில் அருகே கிருஷ்ணசாமி என்பவரின் தோட்டத்தில் செல்வி கூலி வேலை செய்து வந்தார். அவர் நேற்று காலை தோட்டத்துக்குவேலைக்கு சென்று விட்டு மதியம் வீட்டுக்கு வந்தார்.பின்னர் அவர் தனது வீட்டில் உள்ள துணிகளை துவைப்பதற்காகசவுக்குகாடு பகுதியில் உள்ள ஓடைக்கு சென்றார். அப்போது அங்கு புதருக்குள் மறைந்திருந்த காட்டு யானை திடீரென்று வெளியே வந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வி அலறி அடித்து தப்பி ஓடினார் .ஆனாலும் துரத்திச் சென்ற காட்டு யானை செல்வியை துதிக்கையால் பிடித்து வயிற்றில் மிதித்தது .இதில் படுகாயம் அடைந்த அவர் உயிருக்காக போராடினார். இது குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செல்வியை மீட்டுஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.காட்டு யானை தாக்கி இளம்பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.