அவிநாசி ரோடு புதிய மேம்பாலத்தில் ரயில்வே பாதை மேல் பகுதியில் இரும்பு தூண்கள் அமைக்கும்பணி. போக்குவரத்தில் மாற்றம்

கோவை ஜூலை 10 கோவை அவிநாசி ரோடு மேம்பாலம் பணி 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.1,673 கோடியில் நடந்து வருகிறது .இந்த பணியில் 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. ஹோப் காலேஜ் பகுதியில் ரெயில்வே பாதை மேல் பகுதியில் பாலம் அமைக்க வேண்டியது உள்ளது. 52 மீட்டர் தூரத்திற்கு பாலம் அமைக்க ஐதராபாத்தில் இருந்து 900 டன் எடை யிலான 8 இரும்பு தூண்கள் கொண்டுவரப்பட்டது. அந்த இரும்பு தூண்களை நேற்று இரவு பாலத்தின் இரும்பு தளத்தில் கிரேன் மூலம் வைக்கும் பணி நடந்தது. இதற்காக ராட்சத கிரேன் கொண்டுவரப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனை தமிழக நெடுஞ்சாலைத்துறை திட்ட பிரிவு தலைமை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர். பணிகளை தடையின்றி நடத்த உத்தரவிடப்பட்டது. இதனால் அந்த வழியாக நேற்று இரவு 11 மணி முதல் இன்று காலை 6 மணி வரை போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. மேலும் அந்த பகுதியில் பணி நடந்த போது ரயில்கள் இயக்கப்படவில்லை சில ரயில்களின் இயக்கம் மாற்றி அமைக்கப்பட்டது அவிநாசி ரோடு மார்க்கமாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. நள்ளிரவில்பணிகள் நடந்ததை அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூட்டமாக வந்து வேடிக்கைபார்த்தனர். நேற்று இரவு 2 இரும்பு தூண்கள் பொருத்தப்பட்டது. இந்த பணிகள் 4 நாட்களில் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.